முதுமலை மக்களுக்கு ரூ.15 லட்சம் வழங்க வேண்டும்
முதுமலையில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வழங்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் ஆர்.டி.ஓ.விடம் பயனாளிகள் வலியுறுத்தினர்.
முதுமலையில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வழங்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் ஆர்.டி.ஓ.விடம் பயனாளிகள் வலியுறுத்தினர்.
கிராம சபை கூட்டம்
காந்தி ஜெயந்தியையொட்டி கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சி கிராம சபை கூட்டம் குனில்வயல் சமுதாயக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. ஊராட்சி தலைவர் கோமதி தலைமை தாங்கினார். கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது முதுமலையில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடம் வழங்கும் திட்டம் மெதுவாக நடைபெறுவதாகவும், அதுவரை போஸ்பாரா முதல் முதுகுளி வரை தார் சாலை அமைக்க வேண்டும்.
3-வது கட்டமாக மாற்றிடம் வழங்கும் திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படும் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றிடம் வழங்கும் திட்ட பயனாளிகளுக்கு சன்னக்கொல்லியில் விவசாயம் செய்வதற்கான மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை செய்யப்படவில்லை. இதனால் மீண்டும் முதுமலையில் குடியேற போவதாக பயனாளிகள் தெரிவித்தனர்.
முறைகேடு
இதேபோல் மாற்றிடம் திட்ட பயனாளிகளிடம் பணத்தை பெற்றுக் கொண்டு பட்டா இல்லாத நிலங்களை வழங்கி முறைகேடு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அப்போது ஆர்.டி.ஓ. கூறும்போது, முதுமலையில் வசிக்கும் மக்களுக்கு சாலை வசதி, மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
ஸ்ரீமதுரை
ஸ்ரீமதுரை ஊராட்சி சார்பில், கிராம சபை கூட்டம் மண்வயல் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் சுனில் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரெஜி மேத்யூ, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தனியார் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 5 ஏக்கருக்குள் நிலங்களை வாங்க, விற்க உள்ள தடைகளை நீக்க வேண்டும்.
போஸ்பாராவில் இருந்து கூடலூருக்கு காலை 7.30 மணிக்கும், மாலை 7 மணிக்கு கூடலூரில் இருந்து போஸ்பாராவுக்கும் அரசு பஸ் இயக்க வேண்டும். மண்வயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தரமாக டாக்டர் நியமிக்க வேண்டும். வீடுகளுக்கு ஊராட்சி நிர்வாகம் கதவு எண்கள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்டிடத்துக்கு அனுமதி
மசினகுடி ஊராட்சி சார்பில், வாழைதோட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் மாதேவி மோகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் நாகேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு தனியார் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள நிலங்களில் கட்டிடங்கள் கட்ட அனுமதி அளிக்க வேண்டும். தெப்பக்காடு பாலத்தை விரைவாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.