கர்ப்பிணிகள் பரிசோதனைக்காக ரூ.15 கோடியில் வசதிகள்- துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேச்சு


கர்ப்பிணிகள் பரிசோதனைக்காக ரூ.15 கோடியில் வசதிகள்- துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேச்சு
x
தினத்தந்தி 4 Oct 2023 4:41 PM GMT (Updated: 4 Oct 2023 5:42 PM GMT)

கர்ப்பிணிகள் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் சிறப்பு வசதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார் என சமுதாய வளைகாப்பு விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசினார்.

திருவண்ணாமலை

கர்ப்பிணிகள் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் சிறப்பு வசதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார் என சமுதாய வளைகாப்பு விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசினார்.

சமுதாய வளைகாப்பு

திருவண்ணாமலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா ஆகியவை நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ., மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் தரணிவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு 9 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கினார். மேலும் பாரம்பரிய உணவு திருவிழாவை பார்வையிட்டார்.

தொடர்ந்து 'பெண் குழந்தைகளை காப்போம்', 'பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டத்தின் கீழ் அங்கன்வாடி குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் 'போஷன் அபியான்' திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணியாற்றும் 14 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 5 வகையான கலவை சாதம், அறுசுவை உணவை பரிமாறினார்.

பல்வேறு திட்டங்கள்...

முன்னதாக அவர் பேசுகையில், ''தமிழக முதல்- அமைச்சர் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், பெண்களின் ஆரோக்கியத்திற்காகவும் தனி கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவித் தொகையாக மூன்று கட்டங்களாக ரூ.6 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.18 ஆயிரத்தை தாய் உள்ளத்தோடு வழங்கி வருகிறார்.

தமிழக அரசு அனைத்து குழந்தைகளுக்கும் தேவையான ஆரோக்கியமான உணவு மற்றும் சூழலை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனைகள் மேற்கொள்ள பிற மாவட்டங்களுக்கும் மற்றும் மாநிலங்களுக்கும் செல்லும் சூழ்நிலையை மாற்றி தமிழகம் முதல் -அமைச்சர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ரூ.15 கோடி மதிப்பில் பல்வேறு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவ கருவிகள் மற்றும் பரிசோதனை கருவிகள், புதிய கட்டிடங்கள் போன்ற எண்ணற்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்'' என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சரண்யா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆரஞ்சி ஆறுமுகம், ஒன்றிய குழு தலைவர்கள் தமயந்தி ஏழுமலை, அய்யாகண்ணு, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்ச்செல்வன், உள்ளாட்சி பிரதிநிதிகள் துறை, அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Next Story