இலங்கைக்கு கடத்த முயன்ற 1,400 கிலோ பீடி இலை பறிமுதல்
கன்னியாகுமரியில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 1,400 கிலோ பீடி இலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரியில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 1,400 கிலோ பீடி இலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், நீலமணி, நுண்ணறிவு பிரிவு ஏட்டு துரைசிங் மற்றும் போலீசார் நெல்லை மாவட்டம் கூட்டப்புளி கடற்கரை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த ஒரு டெம்போவை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அந்த டெம்போ நிற்காமல் அதி வேகமாக சென்றது.
இதனையடுத்து பாதுகாப்பு குழும போலீசார் தங்களது வாகனத்தில் டெம்போவை துரத்தி சென்றனர். சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் பின்னாலேயே சென்று கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் அருகே உள்ள சங்கம்தேரி பகுதியில் மடக்கினர்.
ரூ.5 லட்சம்
அந்த சமயத்தில் டெம்போவில் இருந்து டிரைவர் குதித்து தப்பி ஓடி விட்டார். இதனை தொடர்ந்து டெம்போவை போலீசார் சோதனை செய்த போது அதில் 40 பண்டல் பீடி இலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு பண்டலும் 35 கிலோ வீதம் மொத்தம் 1,400 கிலோ பீடி இலை இருந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். பின்னர் டெம்போவுடன் பீடி இலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பீடி இலை கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்ல டெம்போவில் கொண்டு சென்றிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கருதப்படுகிறது. மேலும் இதில் யார், யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என விசாரணை நடந்து வருகிறது.