தடையை மீறிய விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் 14 பேர் கைது


தடையை மீறிய விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் 14 பேர் கைது
x

கன்னியாகுமரியில் பாரதமாதா உருவ படத்திற்கு மாலை அணிவிக்க விதிக்கப்பட்ட தடையை மீறிய விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் பாரதமாதா உருவ படத்திற்கு மாலை அணிவிக்க விதிக்கப்பட்ட தடையை மீறிய விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசுவ இந்து பரிஷத் அமைப்பினர்...

விசுவ இந்து பரிஷத்தின் 60-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி நேற்று கன்னியாகுமரி சன்னதி தெருவில் பாரத மாதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தப்போவதாக விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் அறிவித்திருந்தனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

ஆனால் தடையை மீறி பாரத மாதா உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் பீமாராவ் தலைமையில் மாநில விசுவ இந்து பரிஷத் அமைப்பாளர் சேதுராமன், குமரி மாவட்ட தலைவர் குமரேசதாஸ், மாநில பொருளாளர் பாலு, மாநில இணை செயலாளர் காளியப்பன் உள்ளிட்ட விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் கன்னியாகுமரி சன்னதி தெருவில் நேற்று காலை திரண்டனர்.

14 பேர் கைது

பின்னர் பகவதி அம்மன் கோவில் கலையரங்கம் முன்பு பாரத மாதாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த புறப்பட்டனர்.

ஆனால் போலீசார் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், விசுவ இந்து பரிஷத் அமைப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும் பாரத மாதா உருவ படத்தை வைத்துக் கொண்டு அந்த அமைப்பினர் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தடையை மீறியதாக விசுவ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த 14 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கும் பாரத மாதா உருவ படத்துக்கு மாலை அணிவிக்க அனுமதி அளிக்காதது ஏன்? என கூறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story