134 தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.2¼ கோடி ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


134 தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.2¼ கோடி ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x

தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற 134 தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.2¼ கோடியை ஊக்கத்தொகையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் சாதிக்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கிறது. அந்த வகையில் ஆண்டின் தொடக்கத்தில் மத்தியபிரதேசத்தில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தடகளம், கூடைப்பந்து, வாள்வீச்சு, ஜூடோ, படகுப்போட்டி, நீச்சல், டென்னிஸ், பளுதூக்குதல், யோகாசனம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, சைக்கிளிங், மல்லர் கம்பம், துப்பாக்கி சுடுதல், கைப்பந்து உள்ளிட்ட பந்தயங்களில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 7¼ லட்சம், 2021-ம் ஆண்டில் நடந்த 64-வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 4 தங்கம், 23 வெள்ளி, 17 வெண்கலம் வென்ற 17 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.68¼ லட்சம், 12-வது தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் 4 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் வென்ற 15 பேருக்கு ரூ.23½ லட்சம்,

தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற 9 வீரர், வீராங்கனைக்கு ரூ.17½ லட்சம், 2023-ம் ஆண்டு செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற பிரனேசுக்கு ரூ.5 லட்சம், 2019-ம் ஆண்டு பெண்கள் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டம் வென்ற ரக்ஷித்தா ரவிக்கு ரூ.3 லட்சம் என 134 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரம் வழங்கிடும் அடையாளமாக 10 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று வழங்கினார்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்த தேசிய ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றதற்காக நிலா ராஜா பாலு தனக்கு வழங்கப்பட்ட ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 500-க்கான காசோலையை சென்னையில் துப்பாக்கி சுடுதல் தளம் அமைக்கும் பணிக்காக முதல்-அமைச்சரிடம் வழங்கினார்.

தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வென்றிட தமிழ்நாடு அரசின் ஒலிம்பிக் தங்கவேட்டை திட்டத்தின் கீழ் முதல்முறையாக சர்வதேச அளவில் புகழ்பெற்ற வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு தமிழக வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.

அதன்படி தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயிற்சியாளர்கள் ருமேனியா நாட்டைச் சேர்ந்த தடகள பயிற்சியாளர் பெட்ராஸ் பெட்ரோசியன், நெதர்லாந்தை சேர்ந்த ஆக்கி பயிற்சியாளர் எரிக் வோனிக், அமெரிக்காவை சேர்ந்த டென்னிஸ் பயிற்சியாளர் சஞ்சய் சுந்தரம் ஆகியோர் முதல்-அமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story