2 பெண்களிடம் 13 பவுன் நகை அபேஸ்
முப்பந்தல் கோவிலில் 2 பெண்களிடம் 13 பவுன் தங்க நகையை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆரல்வாய்மொழி:
முப்பந்தல் கோவிலில் 2 பெண்களிடம் 13 பவுன் தங்க நகையை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நகை அபேஸ்
நாகர்கோவில் அருகே உள்ள வடக்கு சூரங்குடியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி கீதா (வயது 50). இவர் சம்பவத்தன்று முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் மதியம் சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது கோவிலில் பூஜை முடிந்த பிறகு வெளியே வந்த போது அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதனை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அப்பகுதியில் நகையை தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. அதன்பிறகுதான் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமி நகையை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கீதா ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளித்தார்.
இதேபோல அன்றைய தினம் கணபதிபுரம் அருகே உள்ள ஸ்ரீகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த சிவதாணு மனைவி பாப்பா (60) என்பவரும் முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தபோது 7 பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர் அபேஸ் செய்தார். இதுகுறித்தும் பாப்பா ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு
இந்த 2 புகார்களின் அடிப்படையில் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.