12-ம் தேதி தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்


12-ம் தேதி தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்
x

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 24-ம் தேதி தொடங்குகிறது.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 2024-25-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 19-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் பிப்ரவரி 20-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பிப்ரவரி 22-ம் தேதி வரை நடைபெற்றது.

வழக்கமாக பட்ஜெட்டையொட்டி, துறைகள் தோறும் மானிய கோரிக்கை விவாதம் நடத்தப்படும். ஆனால், மக்களவை தேர்தல் அறிவிப்பை எதிர்பார்த்து மானிய கோரிக்கை விவாதம் நடத்தப்படாமல் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, மக்களவை தேர்தல் முடிவுற்று, நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டது.

இதையடுத்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 24-ம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 24-ம் தேதி காலை 10 மணிக்கு துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துடன் கூட்டத்தொடர் தொடங்கும். இந்த கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த நாட்களில் எந்தெந்த துறைகள் மீதான விவாதம் என்று 24 -ம் தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவோ அல்லது 10 நாட்களுக்கு முன்போ அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நாளை மறுநாள் (12-ம் தேதி) சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது, துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும் நாட்கள் குறித்தும் அலுவல் ஆய்வுக்குழு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.


Next Story