சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 12,870 கனஅடி நீர் வெளியேற்றம்


சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 12,870 கனஅடி நீர் வெளியேற்றம்
x

சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 12,870 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

திருவண்ணாமலை

சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 12,870 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

சாத்தனூர் அணை

தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும். இதில் 7,321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணையில் இருந்து திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் 90-க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய ஏரிகள் நீர் ஆதாரங்களை பெற்று வருகின்றன. இதைத்தவிர அணையில் உள்ள புனல் மின் நிலையம் மூலம் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. அதைத் தொடர்ந்து உபரிநீர் தென் பெண்ணையாற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து தற்போது சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 970 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே அணையின் பாதுகாப்பு கருவி 116.45 அடி உயரத்திற்கு மட்டும் நீரை தேக்கி வைத்துவிட்டு மீதமுள்ள உபரி நீரை தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றி வருகின்றனர்.

நேற்று மாலை நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு 12,870 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதில் 450 கன அடி நீர் பாசன கால்வாயில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வெள்ளப்பெருக்கு

நேற்று முன்தினம் நிலவரப்படி சாத்தனூர் அணையில் இருந்து 9,930 கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது இந்த அளவு மேலும் உயர்ந்து உள்ளது. எனவே தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

எனவே பொதுமக்களை வெள்ளப்பெருக்கில் இருந்து பாதுகாக்க அதிகாரிகள் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரையோர வாழ் மக்களுக்கும் இதுகுறித்த எச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது.


Next Story