பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,262 கனஅடி தண்ணீர் வரத்து
தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,262 கனஅடி தண்ணீர் வருகிறது.
நாகர்கோவில்,
தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,262 கனஅடி தண்ணீர் வருகிறது.
தொடர் மழை
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாத நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக சாரல் மழையாகவே பெய்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சற்று பலத்த மழை பெய்துள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழையில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 41.8 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. இதே போல களியல்-3.8, கன்னிமார்-2.4, புத்தன் அணை-15, சுருளகோடு-3, பாலமோர்-21.6, திற்பரப்பு-4, முள்ளங்கினாவிளை-3.2 என்ற அளவில் மழை பெய்திருந்தது. அணை பகுதிகளை பொறுத்த வரை பெருஞ்சாணி-15.4, சிற்றார் 1-27.6, சிற்றார் 2-12.8, மாம்பழத்துறையாறு-2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
அணை நிலவரம்
அணைபகுதிகளில் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 984 கனஅடி தண்ணீர் வந்தது. அது நேற்று 1,262 கனஅடியாக அதிகரித்துள்ளது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 561 கனஅடி தண்ணீர் வந்தது. அது 742 ஆக வரத்து உள்தளு. இதே போல சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 10 கனஅடியும், சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 13 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 19.40 அடியாக இருந்தது. அது நேற்று 20.19 அடியாக உயர்ந்தது. இதே போல 39.10 அடியாக இருந்த பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 40.80 அடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1.70 அடி உயர்ந்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.