12,500 சோலை மரக்கன்றுகள் நட திட்டம்
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளில் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்ட மரங்களுக்கு ஈடாக, 12,500 சோலை மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளில் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்ட மரங்களுக்கு ஈடாக, 12,500 சோலை மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மரக்கன்றுகள்
நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. மேலும் குறுகிய சாலைகளால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சி பகுதியில் பாலக்காடு ரோடு, வால்பாறை ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் சாலை பணிக்கு இடையூறாக உள்ள மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக மரக்கன்றுகளை நடும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு ஆகிய உட்வட்டங்களில் 12,500 சோலை மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டு உள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:-
விரைவில் நட திட்டம்
போக்குவரத்தை மேம்படுத்தவும், விபத்துகளை தடுக்கவும் சாலை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சாலை பணிக்கு இடையூறாக உள்ள மரங்கள் மட்டுமே கணக்கெடுக்கப்பட்டு வெட்டப்படுகிறது. இதற்காக மாவட்ட கலெக்டர் மூலம் அமைக்கப்பட்ட பசுமை கமிட்டி ஆய்வு செய்து மரங்களை வெட்ட அனுமதி கொடுத்த பிறகு மரங்கள் வெட்டப்படுகின்றன. தற்போது பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதற்காக பொள்ளாச்சி நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலகத்தில் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. அத்தி, நாவல், மகிழம், வேம்பு, புங்கன், பூவரசன் உள்ளிட்ட வகையை சார்ந்த சோலை மரக்கன்றுகள் நடப்படுகின்றன. மரக்கன்றுகள் கூண்டு வைத்து பராமரிக்கப்படும். மேலும் மரக்கன்றுகளுக்கு தேவையான தண்ணீர் லாரிகள் மூலம் ஊற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் முக்கிய சாலைகளில் மரக்கன்றுகள் நடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.