மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்
மேட்டூர்:-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்ததை அடுத்து, அதே அளவு தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இதனால் சேலம், நாமக்கல் உள்பட 12 மாவட்டங்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணைக்கு கடந்த மாதம் வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அதன்பிறகு மழைப்பொழிவு குறைவால் நீர்வரத்தும் படிப்படியாக குறைய தொடங்கியது.
குறிப்பாக கடந்த 2-ந் தேதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்து நேற்று முன்தினம் மாலை வரை அதே அளவில் நீடித்தது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் மழை மீண்டும் தீவிரமடைந்ததால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக ேநற்று முன்தினம் இரவு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
1.25 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
பின்னர் நேற்று காலையில் வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இரவில் வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. அணையின் பாதுகாப்பை கருதி இந்த 1.25 லட்சம் கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்படும் தண்ணீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக அணையை ஒட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி வீதமும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 87 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் காவிரி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
குறிப்பாக காவிரி ஆறு பாய்ந்தோடும் மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.