முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 1,224 அங்கன்வாடி ஊழியர்கள் கைது
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 1,224 அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் நடவடிக்கையை தவிர்க்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
ஏற்கனவே இந்த கோரிக்கைக்காக கடந்த மாதம் காத்திருப்பு போராட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த 20-ந் தேதி அரசு தங்களுக்கு வழங்கிய செல்போன்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் வைத்து சென்றனர்.
இந்தநிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்தர் ராணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாண்டியம்மாள் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் டெய்சி கோரிக்கையை விளக்கி பேசினார்.
சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தேவா கண்டன உரையாற்றினார். இதனை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 1,224 அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை போலீசார் கைது செய்தனர்.