பயனாளிகளுக்கு ரூ.1,216 கோடி வங்கி கடனுதவி


பயனாளிகளுக்கு ரூ.1,216 கோடி வங்கி கடனுதவி
x
தினத்தந்தி 24 Sept 2023 12:15 AM IST (Updated: 24 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 791 பயனாளிகளுக்கு ரூ.1,216 கோடி வங்கி கடன் உதவியை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 791 பயனாளிகளுக்கு ரூ.1,216 கோடி வங்கி கடன் உதவியை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

தொழில்கடன்

சிவகங்கை மாவட்ட அளவிலான தொழில்கடன் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன் வரவேற்று பேசினார். விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் உத்தரவை வழங்கி பேசியதாவது:-

தமிழகத்தில் முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளும் சிறந்து விளங்கிட வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு தி்ட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை முன்னேற்ற பாதையில் வழிநடத்தி வருகிறார்.

மேலும் பல்வேறு திட்டங்களின் மூலம் கடந்த 2022-23-ம் ஆண்டு முதல் 143 பயனாளிகளுக்கு ரூ.13.10 கோடி அளவில் வங்கி மூலம் கடனுதவி செய்து தரப்பட்டுள்ளது.

ரூ.1216 கோடி

மேலும் நடப்பாண்டிற்கு (2023-24) 210 பயனாளிகளுக்கு ரூ.20.13 கோடி கடனுதவி செய்து தருவதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மேற்காணும் திட்டங்களில் வியாபார தொழில்கள், உற்பத்தி தொழில்கள் மற்றும் சேவை தொழில்கள் செய்வதற்கும் மாவட்ட தொழில் மையம் மூலம் விண்ணப்பித்து வங்கி கடனுதவிகள், அரசின் மானியத்துடன் அதிகபட்சம் ரூ.1.50 கோடி வரை வழங்கப்பட்டு வருகிறது.

அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 791 பயனாளிகளுக்கு ரூ.1,216.63 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடன் அனுமதி வழங்கும் விழா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜூனு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் சங்கரகிருஷ்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், சிவகங்கை நகர் மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி, கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் பாலசந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story