120-வது பிறந்த நாள்: காமராஜர் சிலைக்கு இன்று அமைச்சர்கள் மரியாதை


120-வது பிறந்த நாள்: காமராஜர் சிலைக்கு இன்று அமைச்சர்கள் மரியாதை
x
தினத்தந்தி 15 July 2022 5:38 AM IST (Updated: 15 July 2022 5:50 AM IST)
t-max-icont-min-icon

120-வது பிறந்த நாளையொட்டி, காமராஜர் சிலைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

சென்னை,

காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் 15-7-2022 அன்று (இன்று) காலை 10 மணியளவில், சென்னை பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப் படத்துக்கு அமைச்சர்கள் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

தன்னுடைய அயராத உழைப்பினால் ஆட்சியில் சிகரம் தொட்ட காமராஜர், தனது 9 ஆண்டு கால ஆட்சியில் கிராமங்கள்தோறும் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி வைத்து கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கினார்.

2 பிரதமர்களை தேர்ந்தெடுத்ததில் முக்கிய பங்கு

ஏழை மாணவர்கள் பள்ளிகளில் கல்வி கற்பதற்கு ஏற்ப, இலவச மதிய உணவுத் திட்டத்தினைக் கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லாத ஊரே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் கல்வி வளர்ச்சிக்கு அரும் பெரும் தொண்டாற்றினார். விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் வளர்ச்சியடையச் செய்வதற்கு பெரும் பங்காற்றினார்.

மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அணைகள் கட்டி விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். 1964-ம் ஆண்டு மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற காமராஜர், நேருவின் மறைவுக்குப் பின்னர், இந்தியாவின் பிரதமரை 2 முறை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். தான் வாழ்ந்த 73 ஆண்டுகளில் 57 ஆண்டுகள் தமிழ்நாட்டு மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்த ஒப்பற்றத் தலைவராகவும் விளங்கினார்.

கல்வி வளர்ச்சி நாள்

தலைவர் கருணாநிதி 2006-ம் ஆண்டு முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் நாளினை "கல்வி வளர்ச்சி நாளாக" அறிவித்தார். அன்னாரின் பிறந்த நாளானது கல்வி வளர்ச்சி நாளாகத் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

முதல் கல்வி வளர்ச்சி நாள் 15-7-2006 அன்று 2 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கும், பள்ளி மாணவ - மாணவிகளுக்கு சத்துணவுடன் வாரம் 2 முறை முட்டையும், 2-வது கல்வி வளர்ச்சி நாளான 15-7-2007 அன்று சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டையும் வழங்கிடும் திட்டத்தை செயல்படுத்தினார்.

கடற்கரை சாலைக்கு காமராஜர் பெயர்

இதனைத் தொடர்ந்து 3-வது ஆண்டு கல்வி வளர்ச்சி நாளான 15-7-2008 அன்று முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு சத்துணவுடன் வாரம் 3 முறை வாழைப்பழம் வழங்கும் திட்டத்தினையும் அறிமுகப்படுத்தினார்.

மேலும், தலைவர் கருணாநிதியின் ஆட்சியில் சென்னையிலுள்ள கடற்கரை சாலைக்கு 'காமராஜர் சாலை' என்றும், சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராஜரின் பெயர் சூட்டப்பட்டது.

மலர்தூவி மரியாதை

தமிழ்நாடு அரசின் சார்பில் காமராஜரின் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் சென்னை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜரின் உருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப் படத்துக்கு 15-7-2022 அன்று காலை 10 மணியளவில் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story