1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த விஷ்ணு சிற்பம் கண்டெடுப்பு
திண்டிவனம் அருகே 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த விஷ்ணு சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
திண்டிவனம் அருகே ரெட்டணையை அடுத்துள்ளது நாரேரிக்குப்பம். இக்கிராமத்தை சேர்ந்த ஜெயசங்கர் என்பவர் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் விஷ்ணு சிற்பம் இருப்பதாக தகவல் அளித்தார். அதனை தொடர்ந்து விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன், அக்கிராமத்திற்கு சென்று களஆய்வில் ஈடுபட்டார். அப்போது அங்கு கண்டறியப்பட்ட விஷ்ணு சிற்பம் பல்லவர் காலத்தை சேர்ந்தது என்பதும் அப்பகுதியில் மத்திய கால பானை ஓடுகள் இருப்பதும் கண்டறியப்பட்டன. இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்த விஷ்ணு சிற்பம், சுமார் 6 அடி உயர பலகைக்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. நின்ற நிலையில் கம்பீரமாக காட்சி தருகிறார் விஷ்ணு. நான்கு கரங்களில் பின்னிரு கரங்கள் முறையே சக்கரம் மற்றும் சங்கு ஆகியவற்றை ஏந்தி இருக்கின்றன. பல்லவர் கலைப்பாணியை கொண்டுள்ள இச்சிற்பத்தின் காலம் கி.பி. 8-9-ம் நூற்றாண்டு ஆகலாம். இதனை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ராஜகோபால் உறுதிப்படுத்தி இருக்கிறார். விஷ்ணு சிற்பம் அமைந்துள்ள பகுதியில் சற்று தூரத்தில் சக்கரம் பொறிக்கப்பட்ட பலகைக்கல் மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுகிறது. இது விஷ்ணு கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லையை குறிக்கும் திருவாழிக்கல் ஆகும். முன்பு இப்பகுதியில் விஷ்ணு கோவில் இருந்திருப்பதை இது உறுதி செய்கிறது. மேலும் இப்பகுதியில் மண்ணின் மேற்பரப்பில் நீண்ட தூரத்திற்கு பானை ஓடுகள் காணப்படுகின்றன. இவை மத்திய கால (ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த) பானை ஓடுகளாகும். 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த விஷ்ணு சிற்பம் மற்றும் பானை ஓடுகள் உள்ளிட்டவை காணப்படுவதால் நாரேரிக்குப்பம் கிராமத்தின் தொன்மை தெரியவருகிறது. தற்போது விஷ்ணு சிற்பம் இருக்கும் பகுதியில் வைணவ கோவில் எழுப்பும் பணியில் ஜெயசங்கர் குடும்பத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.