அரிசி ஆலைகளில் பதுக்கி வைத்திருந்த 120 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - வருவாய்த்துறையினர் நடவடிக்கை


அரிசி ஆலைகளில் பதுக்கி வைத்திருந்த 120 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - வருவாய்த்துறையினர் நடவடிக்கை
x

அரிசி ஆலைகளில் பதுக்கி வைத்திருந்த 120 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருவாய்த்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருவள்ளூர்

பொன்னேரி தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து கடத்தி வரப்பட்டு பதுக்கிய ரேஷன் அரிசி பாலீஷ் செய்யப்பட்டு ஆந்திராவுக்கு கடத்துவதாக ரகசிய தகவல் பொன்னேரி தாசில்தாருக்கு கிடைத்தது. இதனையடுத்து பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் தலைமையில் ஒரு குழுவும் பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் சண்முகசுந்தரம் தலைமையில் மற்றொரு குழுவும் தகவல் கிடைத்த இடங்களில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆத்தூர் பகுதியில் உள்ள கிடங்கில் ஆய்வு செய்தபோது ரேஷன் அரிசி மூட்டைகள் ஒரு லாரி மற்றும் 2 சிறிய ரக வாகனங்களில் ஏற்றி கொண்டிருக்கும்போது தாசில்தார் செல்வகுமார் கண்டுபிடித்தார்.

100 டன் எடை கொண்டதாக இருப்பதை பதுக்கி வைத்துள்ளது தெரியவந்தது. இதேபோல் காட்டூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலையை வாடகைக்கு எடுத்து அதில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து பதுக்கி வைத்து பாலீஷ் செய்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதில் 20 டன் ரேஷன் அரிசி இருப்பதை பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் சண்முகசுந்தரம், துணை தாசில்தார் வாசுதேவன் ஆகியோர் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து செம்புலிவரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவர்கள் தலைமறைவாகி விட்டனர்.


Next Story