உவரி கடலில் 120 விநாயகர் சிலைகள் கரைப்பு
உவரி கடலில் 120 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.
களக்காடு:
களக்காடு பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 14 இடங்களிலும், அகில பாரத இந்து மகாசபா சார்பில் 15 இடங்களிலும், விநாயகர் சதுர்த்தி குழு சார்பில் 24 இடங்களிலும் மொத்தம் 53 இடங்களில் விநாயகர் சிலைகள் கடந்த 18-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. தினமும் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளும், விநாயகர் சதுர்த்தி குழு விநாயகர் சிலைகளும் நேற்று களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவில் முன்பு கொண்டு வரப்பட்டு ஊர்வலமாக புறப்பட்டது.
அகிலபாரத இந்து மகாசபா சார்பில் களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிதம்பரம், அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் முத்தப்பா, திருக்கோவில், திருமடம் கோட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார், தென் தமிழ்நாடு இணை செயலாளர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் விநாயகர் சிலைகள் உவரிக்கு கொண்டு செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டது. நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வள்ளியூர், பணகுடி, பழவூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் 27 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த சிலைகளை உவரி கடலில் கரைப்பதற்காக ஆங்காங்கே இருந்து வள்ளியூர் முருகன் கோவில் பகுதிக்கு நேற்று வாகனங்களில் கொண்டு வரப்பட்டது.
கோவில் முன்பிருந்து ஊர்வலத்தை இந்து முன்னணி மாவட்ட பொருளாளர் பரமசிவம் தலைமையில் கோட்ட தலைவர் தங்க மனோகர் முன்னிலையில் முத்தையா சுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று உவரி கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு யோகேஷ் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
திசையன்விளை, ராதாபுரம், நாங்குநேரி தாலுகா பகுதிகளில் பல்வேறு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மாலை வாகனங்கள் மூலம் மேளதாளம் முழங்க திசையன்விளை அடைக்கலம் காத்த விநாயகர் கோவில் அருகில் கொண்டுவரப்பட்டது. அங்கு இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. தொடர்ந்து இந்து முன்னணி கோட்ட தலைவர் தங்க மனோகர் தலைமை தாங்கினார். மாநில இந்து முன்னணி துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். திசையன்விளை பேரூராட்சி பா.ஜனதா கவுன்சிலர் லிவ்யா சக்திவேல் கொடியசைத்து வாகன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் திசையன்விளை மெயின் பஜார், இடையன்குடி வழியாக உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் கடற்கரையை அடைந்தது. அங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 120 விநாயகர் சிலைகளும் கடற்கரையில் இறக்கி வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. திசையன்விளை நாடார் தெற்கு தெருவில் இருந்து கொண்டுவரப்பட்ட ராட்சத அளவிலான விநாயகர் சிலை பொக்லைன் எந்திரம் மூலமும், மற்ற சிலைகள் கடலில் சுமந்து சென்றும் கரைக்கப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரத்தில் இந்து முன்னணி சார்பில் 29-வது ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து 24, அம்பையில் இருந்து 8, கல்லிடைக்குறிச்சியில் இருந்து 16 என மொத்தம் 48 விநாயகர் சிலைகள் சிவந்திபுரத்திற்கு பக்தர்களால் மேளதாளத்துடன் கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கு நடந்த விழாவிற்கு இந்து முன்னணி நகர தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். மாநில நிர்வாக கமிட்டி உறுப்பினர் சக்திவேலன், இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் நாகராஜன், அம்பை தலைவர் சங்கர், பொறுப்பாளர்கள் மில்லர், வீர மகேஷ், ராஜா, வில்லியன்பால், சுரேஷ் மற்றும் பா.ஜ.க. தங்கேஸ்வரன், ராமராஜன், குட்டி, ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.
பின்னர் விநாயகர் சிலை ஊர்வலத்தை டாக்டர் முருகன் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் வராகபுரம், அம்பலவாணபுரம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக பாபநாசம் சென்றடைந்தது. அங்கு விநாயகர் சிலைகளுக்கு பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் அம்பை தாசில்தார் சுமதி தலைமையில் மண்டல துணை தாசில்தார் ராஜதுரை, வருவாய் ஆய்வாளர் இசக்கி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விநாயகர் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து வருவாய் துறையினர் அந்த சிலைகளை கரைப்பதற்காக அம்பை அருகே வாகைக்குளத்திற்கு கொண்டு சென்றனர்.