நெல்லையில் 120 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
நெல்லையில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட 120 விநாயகா் சிலைகள் தற்காலிக குளத்தில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகள் சார்பில் நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் உட்கோட்ட பகுதிகளில் 60 சிலைகள், நாங்குநேரி சுற்றுவட்டார பகுதிகளில் 62 சிலைகள், அம்பை பகுதியில் 49 சிலைகள், சேரன்மாதேவி பகுதிகளில் 29 சிலைகள் என மொத்தம் 204 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு உவரி, வாகைகுளம், செட்டிகுளம் பகுதிகளில் கரைக்கப்பட்டன.
நெல்லை மாநகர பகுதிகளில் 76 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில் பெரும்பாலான சிலைகள் ரசாயனப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டதால் அவைகள் நீர்நிலைகளில் கரைக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்காக வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் இடதுபுறம் தற்காலிகமாக பெரிய குளம் வெட்டப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பி சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
நேற்று காலை முதலே விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன. அதன்படி நெல்லை டவுன் பகுதியில் இருந்து 41 விநாயகர் சிலைகள், பாளையங்கோட்டையில் இருந்து 22 சிலைகள், மேலப்பாளையத்தில் இருந்து 7 சிலைகள், தச்சநல்லூரில் இருந்து 4 சிலைகள், பெருமாள்புரத்தில் இருந்து ஒரு விநாயகர் சிலை லோடு வேனில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன.
அதேபோல் தாழையூத்து, தச்சநல்லூர், மானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டன. மொத்தம் 120 சிலைகள் கொண்டுவரப்பட்டு, அவை அனைத்தும் தற்காலிக குளத்தில் ஒன்றன்பின் ஒன்றாக கரைக்கப்பட்டன.
சிலைகள் கரைக்கும் இடத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. துரை பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து, சிலைகள் கரைக்கப்படுவது குறித்து கேட்டறிந்தார். அப்போது துணை கமிஷனர்கள் சரவணக்குமார், ஆதர்ஷ் பசேரா, உதவி போலீஸ் கமிஷனர்கள் பிரதீப், ராஜேஸ்வரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
நெல்லை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் கணேசன் உத்தரவின்பேரில் பாளையங்கோட்டை நிலைய உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன், போக்குவரத்து அலுவலர் சுந்தரம் மற்றும் 25 நீச்சல் வீரர்கள் சிலைகளை கரைக்கும் பணியில் ஈடுபட்டனர்.