கள், மது விற்றதாக 12 பேர் கைது
நெகமம், கிணத்துக்கடவு பகுதிகளில் கள், மது விற்றதாக 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெகமம்
நெகமம், கிணத்துக்கடவு பகுதிகளில் கள், மது விற்றதாக 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள் விற்பனை
நெகமம் பகுதியில் தென்னந்தோப்புகளில் கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணப்பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுச்சாமி, மனோகரன், சங்கீத்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் கக்கடவு பகுதியில் கள் விற்பனை செய்த தினேஷ்பிரபுராம் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 லிட்டர் கள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மூலனூர் பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்த நவநீதகிருஷ்ணன், போளிகவுண்டன்பாளையம் பகுதியில் கள் விற்ற கருப்பசாமி, கொல்லப்பட்டியில் கள் இறக்கி விற்பனை செய்த மாரிமுத்து, காணியாலாம்பாளைத்தில் கள் விற்ற மகேந்திரன், வெள்ளாளபாளையம் பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்த ஜெகநாதன், செங்குட்டைப்பாளையம் கிரி தோட்டத்தில் கள் இறக்கி விற்பனை செய்த திருமூர்த்தி ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 65 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.
177 மதுபாட்டில்கள் பறிமுதல்
கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், செந்தில்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிங்கையன்புதூர் பஸ் நிறுத்தம் அருகே மது விற்ற சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ் (37) என்பவரை கைது செய்தனர்.
அதேபோல் கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோடு டாஸ்மாக் கடை அருகே மது விற்றதாக ராமநாதபுரத்தை சேர்ந்த மணிவண்ணன் (43) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கிணத்துக்கடவு சுடுகாடு அருகே மது விற்பனை செய்த திருவாடனை பகுதியை சேர்ந்த கார்த்தி (32), கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள மேம்பாலத்தில் கீழ் பகுதியில் மதுவிற்ற திருவாடனையை சேர்ந்த சுதாகர் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான 4 பேரிடம் இருந்து மொத்தம் 157 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல நெகமத்தை அடுத்த அனுப்பர்பாளையம் அறிவொளி நகரில் பதுக்கி வைத்து மதுவிற்பனை செய்த லோகநாதன் (48) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.