போலீஸ் வேலைக்கான தேர்வை 11,974 பேர் எழுதினார்கள்


போலீஸ் வேலைக்கான தேர்வை 11,974 பேர் எழுதினார்கள்
x

நெல்லை மாவட்டத்தில் போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை 11 ஆயிரத்து 974 பேர் எழுதினார்கள். 2 ஆயிரத்து 468 பேர் தேர்வு எழுத வரவில்லை

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை 11 ஆயிரத்து 974 பேர் எழுதினார்கள். 2 ஆயிரத்து 468 பேர் தேர்வு எழுத வரவில்லை.

எழுத்து தேர்வு

தமிழகம் முழுவதும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை 2-ம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று தேர்வையொட்டி அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நெல்லை மாவட்டத்தில் ஆண் விண்ணப்பதாரர்கள் 11 ஆயிரத்து 521 பேர், பெண் விண்ணப்பதாரர்கள் 2 ஆயிரத்து 920 பேர், திருநங்கை ஒருவர் என மொத்தம் 14 ஆயிரத்து 442 பேர் விண்ணப்பித்திருந்தனர். மாநகர பகுதியில் 10 மையங்களிலும், மாவட்டத்தில் 6 மையங்களிலும் தேர்வு நடைபெற்றது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி 12.40 மணிக்கு முடிவடைந்தது. இதனையொட்டி தேர்வர்கள் அனைவரும் 9.30 மணிக்கு தேர்வு மையங்களுக்குள் சென்றனர்.

முன்னதாக தேர்வர்கள் கடுமையான சோதனைகளுக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

போலீசார் பாதுகாப்பு

மாநகர பகுதியில் பெரும்பாலான மையங்களில் தேர்வர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். ஒரு சில மையங்கள் முன்பு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது.

நெல்லை மாவட்ட காவல்துறை எழுத்து தேர்வு சிறப்பு மேற்பார்வை கண்காணிப்பு அதிகாரியான நெல்லை சரக டி.ஜ.ஜி. பிரவேஷ்குமார் தலைமையில், போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. இதற்காக 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 8 உதவி மற்றும் துணை சூப்பிரண்டுகள், 17 இன்ஸ்பெக்டர்கள், 82 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 508 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

11 ஆயிரத்து 974 பேர்

நெல்லை மாநகர பகுதியில் நடந்த எழுத்து தேர்வை மாநகர துணை போலீஸ் கமிஷனர் அனிதா தலைமையில் போலீஸ் அதிகாரிகள் கண்காணித்தனர்.

நெல்லை மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தேர்வுக்கு விண்ணப்பித்த 14 ஆயிரத்து 442 பேரில் 11 ஆயிரத்து 974 பேர் தேர்வு எழுதினர். 2 ஆயிரத்து 468 பேர் தேர்வு எழுத வரவில்லை. மாவட்ட பகுதியில் நடந்த தேர்வு மையத்தில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

-------------------------------------

தேர்வு முடிந்தும் வெளியே அனுப்பாததால் வாக்குவாதம்

நெல்லை மாநகர பகுதியில் போலீஸ் தேர்வு எழுத பெண்களுக்காக பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி, சாராள் தக்கர் கல்லூரி, மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மையத்தில் மதியம் 12-40 மணிக்கு தேர்வு முடிந்த நிலையில் பிற்பகல் 2 மணி வரை தேர்வு எழுதியவர்களை வெளியே அனுப்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் கைக்குழந்தைகளுடன் தேர்வு எழுத வந்த பெண்கள் அவதிப்பட்டனர். அப்போது பெற்றோர்கள் ஆத்திரம் அடைந்து தேர்வு நடத்தியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தேர்வு எழுதியவர்கள் கூறுகையில், தமிழ் பொது அறிவு தேர்வில் எளிதான கேள்விகள் இடம் பெற்றிருந்தன. எளிதில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது. ஆனால் தேர்வு மையத்திற்குள் 9 மணிக்கு நுழைந்த எங்களை பகல் 2 மணி வரை காக்க வைத்து விட்டனர். மற்ற மையங்களில் தேர்வு முடிந்தவுடன் வெளியேறி விட்டனர். ஆனால் இந்த மையத்தில் தேர்வு முடிந்த பின் ஆதார் எண் சரிபார்ப்பு, தேர்வு எழுதிய விடைத்தாள் இணைப்பு சான்றிதழ் சரிபார்த்தல் என பல்வேறு காரணங்களை காட்டி எங்களை வெகு நேரம் காக்க வைத்து விட்டனர், என்றனர்.


Next Story