பெரம்பலூரில் கடந்த 2 ஆண்டுகளில் 11,630 பேருக்கு காப்பீட்டு திட்டம் மூலம் சிகிச்சை-கலெக்டர் தகவல்
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 11,630 பேருக்கு காப்பீட்டு திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.
பாராட்டு சான்றிதழ்
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் இணைந்து செயல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மத்திய-மாநில அரசுகளின் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திய மருத்துவமனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி மத்திய-மாநில அரசுகளின் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
மேலும் அவர் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்த 5 பயனாளிகளுக்கு நினைவு பரிசுகளையும், காப்பீட்டு திட்டம் தொடர்பாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சிறப்பாக பணிபுரிந்த காப்பீட்டு அலுவலக பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.
மருத்துவக் காப்பீட்டு திட்டம்
இதையடுத்து, முதல்-அமைச்சரின் காப்பீட்டு அட்டை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு காப்பீட்டு அட்டைகளையும், 108 ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேந்திரன் பணியின் போது விபத்தில் சிக்கி இறந்ததற்கு, அவருடைய மனைவி சுகந்தியிடம் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து காப்பீடு தொகையாக பெறப்பட்ட ரூ.5 லட்சத்துக்கான காசோலையினையும் கலெக்டர் கற்பகம் வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் 7 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.
காப்பீட்டு அட்டைகள்
இந்த மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 11 ஆயிரத்து 630 பயனாளிகளுக்கு ரூ.26 கோடியே 84 லட்சத்து 62 ஆயிரத்து 843 சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக 2 ஆயிரத்து 816 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 72 லட்சத்து 16 ஆயிரத்து 504 செலவில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 1 லட்சத்து 41 ஆயிரத்து 437 குடும்பங்களுக்கு காப்பீட்டு திட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் பயனடையலாம்.
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை தேவைப்படுவோர் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெற்ற ஆண்டு வருமான சான்று ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் காப்பீட்டு திட்ட மையத்தை அணுகி இணையதளத்தில் பதிவு செய்து காப்பீட்டு அட்டை பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் இளவரசன், மாவட்ட காப்பீட்டு திட்ட அலுவலர் ஹிலாலுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.