சேலம் மாவட்டத்தில் 42 மையங்களில் குரூப்-1 தேர்வை 11,238 பேர் எழுதினர்
சேலம் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 42 மையங்களில் 11 ஆயிரத்து 238 பேர் எழுதினர். 7 ஆயிரத்து 440 பேர் தேர்வு எழுத வரவில்லை.
குரூப்-1 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழகம் முழுவதும் நேற்று குரூப்-1 தேர்வு நடைபெற்றது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வு 42 மையங்களில் 62 தேர்வு அறைகளில் நடந்தது. இந்த தேர்வை எழுதுவதற்காக மாவட்டத்தில் 18 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் காலை 7.30 மணி முதலே தேர்வர்கள் தேர்வு எழுதும் மையங்களுக்கு வர தொடங்கினர்.
பின்னர் தேர்வர்களின் நுழைவு சீட்டை அதிகாரிகள் சரிபார்த்து தேர்வு அறைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தேர்வு எழுதும் மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னனு சாதன பொருட்களை கொண்டு செல்ல தேர்வர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. தேர்வர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
கலெக்டர் ஆய்வு
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. மாவட்டத்தில் இந்த தேர்வை 11 ஆயிரத்து 238 பேர் எழுதினர். 7 ஆயிரத்து 440 பேர் தேர்வு எழுத வரவில்லை. குரூப்-1 தேர்வை கண்காணிப்பதற்காக 6 பறக்கும் படைகள், 16 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இவர்கள் ஒவ்வொரு மையங்களுக்கு சென்று தேர்வு அறைகளை கண்காணித்தனர். மேலும் தேர்வு மையங்கள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. சேலம் அரசு கலைக்கல்லூரி தேர்வு மையத்தை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகள் உடனிருந்தனர்.