தாம்பரத்தில் ரூ.110 கோடியில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி
குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தி தாம்பரத்தில் ரூ.110 கோடியில் 500 படுக்கை வசதிகளுடன் 5 ஏக்கரில் செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி அமைக்கப்பட உள்ளது.
தாம்பரம்,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வேண்டும் என பல ஆண்டுகளாக சென்னை புறநகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற அவசர சிகிச்சைகளுக்கு உயர் சிகிச்சை தேவைப்படும்போது இங்கிருந்து சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் அனுப்பப்படுகின்றனர்.
இதனால் சில நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பலர் உயிரிழக்கின்றனர். எனவே அனைத்து வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரியாக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியை மாற்ற வேண்டும் என்றும் நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தமிழக அரசு தற்போது குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியை, செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தி உள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வரஉள்ளது.
ரூ.110 கோடியில்...
அதன்படி புதிதாக அமைக்கப்படவுள்ள செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி ரூ.110 கோடியில் 6 மாடி கட்டிடத்தில் 500 படுக்கை வசதிகளுடன் 5 ஏக்கரில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக தாம்பரத்தில் உள்ள அரசு காசநோய் ஆஸ்பத்திரி வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ஆஸ்பத்திரியில் படுக்கை வசதிகளை அதிகரித்து, டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள். அனைத்து நோய்களுக்கும் சிறப்பு பிரிவுகள் தொடங்கி சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். 5-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை அரங்குகள் மூலம் அறுவை சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இருதய நோய் பிரிவு, நரம்பியல் பிரிவு, விபத்து சிகிச்சை பிரிவு, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டர், உயர்தர ஆய்வகம் உள்பட பன்னோக்கு ஆஸ்பத்திரியில் உள்ள அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது. பொதுமக்களின் வசதிக்காக கட்டண வார்டுகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து வசதிகள்
இதையடுத்து தற்போது உள்ள குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி, மகளிர் மற்றும் குழந்தைகள் நல பிரிவாக மாற்றப்படவுள்ளது. அதேபோல் ரூ.6.8 கோடியில் அனைத்து வசதிகளுடன் மகளிர் மற்றும் குழந்தைகள் நல பிரிவு கட்டிடமும் கட்டப்பட்டு வருகிறது.
தற்போது குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் மாதம் சுமார் 250 முதல் 300 வரை குழந்தைகள் பிறக்கிறது. 1200 முதல் 1500 வரை புறநோயாளிகள் வருகை தருகின்றனர். இங்கு 213 படுக்கை வசதிகள் தற்போது உள்ளது.
மாவட்டே அரசு தலைமை ஆஸ்பத்திரி செயல்பாட்டுக்கு வரும்போது மேல் சிகிச்சைக்காக சென்னை மற்றும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படாமல் நோயாளிகளுக்கு இங்கேயே சிகிச்சை அளிக்க வசதிகள் கிடைக்கும்.
குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்த தமிழக சுகாதாரத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்த சென்னை புறநகர் பகுதி பொதுமக்கள், இதற்கான அரசாணையை விரைவில் வெளியிட்டு பணிகளை தொடங்க அரசு முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.