மின் கம்பிகளை டிப்பர் லாரி இழுத்து சென்றதால் 11 மின் கம்பங்கள் சாய்ந்தன


மின் கம்பிகளை டிப்பர் லாரி இழுத்து சென்றதால் 11 மின் கம்பங்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 10 Aug 2023 12:45 AM IST (Updated: 10 Aug 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே மின் கம்பிகளை டிப்பர் லாரி இழுத்து சென்றதால் 11 மின் கம்பங்கள் சாய்ந்தன. கார், மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தன.

நாகப்பட்டினம்

கீழ்வேளூர் அருகே மின் கம்பிகளை டிப்பர் லாரி இழுத்து சென்றதால் 11 மின் கம்பங்கள் சாய்ந்தன. கார், மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தன.

சாலையை மேம்படுத்தும் பணி

நாகை-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நாகை முதல் தஞ்சை வரை சாலையை மேம்படுத்தும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதையொட்டி நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கூத்தூர் பகுதியில் நேற்று சாலையில் தார் போடும் பணி நடந்தது. இதற்காக தார், ஜல்லிக்கற்கள் கலவையை ஏற்றிவர டிப்பர் லாரி பயன்படுத்தப்பட்டது.

மேலே தூக்கப்பட்டிருந்த இந்த லாரியின் டிப்பர், கூத்தூர் மண் ரோடு பஸ் நிறுத்தத்தில் இருந்து கூத்தூர் செல்லும் சாலையின் குறுக்காக சென்ற உயர் அழுத்த மின் கம்பிகளை எதிர்பாராதவிதமாக இழுத்து சென்றது.

கார்- மோட்டார் சைக்கிள் சேதம்

100 மீட்டர் தூரம் மின் கம்பிகள் இழுத்து செல்லப்பட்டதால் அங்கு சாலையின் இருபுறமும் இருந்த 11 மின் கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்தன. 100 வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பு வயர்களும் அறுந்தன. மின் கம்பிகள் அறுந்து விழுந்த வேகத்தில் சாலை ஓரத்தில் நின்று கொண்டு இருந்த ஒரு கார், மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தன.

அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு மின் கம்பங்கள் சாய்ந்து கிடந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குருக்கத்தி, கூத்தூர் கிராம பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பொதுமக்கள் கோரிக்கை

மேம்பாட்டு பணிக்காக அந்த பகுதி சாலை 7 அடி உயரம் உயர்த்தப்பட்டுள்ளதால், மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. சாலை பணிக்காக மண் எடுக்கப்பட்டதால் கூத்தூர் சாலையில் இருபுறமும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் லாரி மோதி விபத்து ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு, பள்ளங்களையும், தாழ்வாக ெசல்லும் மின்கம்பிகளையும் சீரமைக்க வேண்டும் என முறையிட்டனர்.

இதை அறிந்த கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் அங்கு சென்று பொதுமக்களை சமாதானம் செய்தனர். மேலும் விபத்தில் சிக்கிய டிப்பர் லாரியை கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அந்த பகுதியில் மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.


Next Story