செங்கல் சூளையில் பணிபுரிந்த 3 சிறுமிகள் உள்பட 11 வடமாநில தொழிலாளர்கள் மீட்பு


செங்கல் சூளையில் பணிபுரிந்த 3 சிறுமிகள் உள்பட 11 வடமாநில தொழிலாளர்கள் மீட்பு
x

கிருஷ்ணராயபுரம் அருகே செங்கல் சூளையில் பணிபுரிந்த 3 சிறுமிகள் உள்பட 11 வடமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

கரூர்

3 சிறுமிகள் மாயம்

சத்தீஸ்கர் மாநிலம் நாரணபூரி மாவட்டத்தை சேர்ந்த 14 வயதுக்குட்பட்ட 3 சிறுமிகள் திடீரென மாயமானதாக அவர்களது பெற்றோர் அந்த மாவட்ட போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த சிறுமிகளின் செல்போன் எண்களை வைத்து ஆய்வு செய்ததில் அவர்கள் கரூர் மாவட்டத்தில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து சத்தீஸ்கர் மாநில சமூக நல அலுவலர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

செங்கல் சூளையில் விசாரணை

இதனைதொடர்ந்து கரூர் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் அந்த மாநில குழுவினருடன் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) சைபுதீன், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ், குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர், மாயனூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் கிருஷ்ணராயபுரம் அருகே வீரராக்கியத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் விசாரணை நடத்தினர்.

அப்போது அங்கு காணாமல் போன 3 சிறுமிகள் உள்பட 50 வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது. மேலும், அங்கு வேலை பார்த்த 3 சிறுமிகள் உள்பட 11 பேர் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர்.

11 பேர் மீட்பு

இதனைத்தொடர்ந்து அவர்கள் 11 பேரும் மீட்கப்பட்டு கரூர் வெங்கமேட்டில் உள்ள தனியார் காப்பகத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story