விற்பனை செய்ய முயன்ற 11 பச்சைக்கிளிகள் பறிமுதல்
விழுப்புரத்தில் விற்பனை செய்ய முயன்ற 11 பச்சைக்கிளிகள் பறிமுதல்
விழுப்புரம்
விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஒருவர், கிளிகள் விற்பனை என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதைப்பார்த்த சென்னை மண்டல தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாடு பிரிவு அதிகாரிகள், அந்த முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த செல்போனை தொடர்புகொண்டு பொதுமக்கள் பேசுவதுபோன்று பேசி தங்களுக்கு கிளிகள் தேவைப்படுவதாகவும் என்ன விலை என்றும் பேசியுள்ளனர். அதற்கு அந்த நபரும், அவரது நண்பரும் தாங்கள் விழுப்புரத்தில் இருப்பதாகவும் நேரில் வந்தால் கிளிகளை தருவதாகவும் கூறியுள்ளனர். அதற்கு வனத்துறை அதிகாரி ஒருவர், தான் சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு ரெயில் மூலம் வருவதாகவும், ரெயில் நிலையம் அருகில் வைத்து கிளிகளை வாங்கிக்கொள்வதாகவும் கூறினார்.
அதன்படி அந்த நபர்கள் இருவரும், 11 கிளிகளுடன் விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் வந்தனர். அவர்களை பார்த்த வனத்துறை அதிகாரிகள், அந்த நபர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து விழுப்புரம் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் வைத்திருந்த கிளிகள் சிவப்பு வளைய பச்சைக்கிளிகள் என்பதும், இவற்றை வளர்ப்பதும், விற்பதும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றமாகும் என்று தெரிவித்தனர். பின்னர் இருவரிடமும் இருந்து பச்சைக்கிளிகளை கைப்பற்றியதோடு ரூ.50 ஆயிரம் இணக்க கட்டணமாக பெற்று அவர்களை கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.