10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிகளில் வெளியிட வேண்டும் - தேர்வுத்துறை அறிவுறுத்தல்
10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிகளில் வெளியிட வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
சென்னை
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவை அதே 20-ந்தேதி பகல் 12 மணிக்கும் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் சென்று தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் வெளியிட வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.