1,091 தற்காலிக நிவாரண மையங்கள் தயார்
விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக பொதுமக்களை தங்க வைக்க 1091 தற்காலிக நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு துறை வாரியாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களுக்கும் துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பருவமழையை கண்காணிக்கும் பொருட்டு 53 குழுக்கள் நியமிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இயற்கை இடர்பாடுகள்
மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்பொருட்டு 29 இடங்களில் மாதிரி ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளது. பேரிடர்களை முன்கூட்டியே தெரிவித்து எச்சரிக்கை செய்யும் பொருட்டு கடலோர பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பேரிடர்களை எதிர்கொள்ளும் பொருட்டு வானூர், மரக்காணம் ஆகிய தாலுகாக்களில் 9,500 பேர் தங்கும் அளவிலான 12 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன.
மாவட்டம் முழுவதும் பேரிடரின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களை தங்க வைக்க 1091 தற்காலிக நிவாரண மையங்களும், 86 மாணவ- மாணவிகள் விடுதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறைகளில் மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள், கருங்கற்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பேரிடர் காலங்களில் அவசரகால தேவைக்கு பயன்படுத்தும் விதமாக 3 ஆயிரம் உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பொருட்கள்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி பகுதிகளில் 187.78 கி.மீ. நீளமுள்ள வடிகால் வாய்க்கால் பகுதிகளில் 120.03 கி.மீ. நீளத்திற்கு தூர்வாரும் பணி முடிவுற்றுள்ளது. கடலோர பகுதிகளில் அமைந்துள்ள ரேஷன் கடைகளில் 2 மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் வடகிழக்கு பருவமழையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.