சித்ரா பவுர்ணமியையொட்டி 108 திருவிளக்கு பூஜை
பிரம்மரிஷி மலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பெரம்பலூர் அருகே எளம்பலூரில் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று காலை காகன்னை ஈஸ்வரருக்கு 108 சங்காபிஷேகமும், கோமாதா பூஜையும் நடைபெற்றது. மாலையில் 210 மகா சித்தர்கள் யாகத்துடன், 108 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவிற்கு மகா சித்தர்கள் தபோவன மாதாஜி ரோகிணி ராஜகுமார், இளம் தவயோகிகள் சுந்தர மகாலிங்கம், தவசிநாதன், ராதா மாதாஜி முன்னிலை வகித்தனர். திருவிளக்கு பூஜையை வேப்பூர் ஆதீனம் சிவ.தங்கதுரை சுவாமி குழுவினர் நடத்தி வைத்தனர். இதில் பெரம்பலூர், எளம்பலூர், தண்ணீர் பந்தல், எம்.ஜி.ஆர். நகர், சமத்துவபுரம் பகுதிகளை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு பூஜை செய்தனர். விழாவில் கலந்துகொண்ட பெண்களுக்கு ரவிக்கை, மாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம் ஆகிய மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. அதன் பின்பு அன்னதானம் நடந்தது.