1,053 ஆலிவர்ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு
1,053 ஆலிவர்ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு
வேதாரண்யம் கடற்கரை பகுதியில் 1,053 ஆலிவர்ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
ஆலிவர்ரெட்லி ஆமைகள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் வரை ஆலிவர்ரெட்லி ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை கடற்கரைக்கு வந்து ஆமைகள் சுமார் 1000-க்கும் மேற்பட்ட முட்டைகளை இட்டு மீண்டும் கடலுக்கு சென்று உள்ளது.
இந்த முட்டைகளை நரி, நாய் மற்றும் மனிதரிடம் இருந்து பாதுகாத்து சேகரிக்க வனத்துறையினர் ஊழியர்களை கொண்டு தனி குழு அமைத்துள்ளனர். மேலும் முட்டைகள் சேகரிக்கப்பட்டு கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுதுறை கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக ஒவ்வொரு ஆமை முட்டைகளையும் தனித்தனியாக குழி தோண்டி புதைத்து வைத்துள்ளனர்.
முட்டை பொரிப்பகம்
புதைக்கப்பட்ட முட்டைகள் 41 முதல் 55 நாட்களுக்குள் பொரித்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் அவற்றை பத்திரமாக எடுத்து மீண்டும் கடற்கரை கடலில் விடுவது வழக்கம். கடந்த 1972-ம் ஆண்டு முதல் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு சுமார் 10 லட்சம் குஞ்சுகள் கோடியக்கரை கடற்கரையிலிருந்து விடப்பட்டுள்ளன. இந்த ஆமை குஞ்சுகள் 25 ஆண்டுகள் கழித்து பருவமடைந்து இதே கடற்கரைக்கு மீண்டும் முட்டையிட வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
அதன்படி நேற்று கோடியக்கரை முனங்காடு, மணியன் தீவு, ஆறுகாட்டுதுறை கடற்கரையில் 3 ஆலிவர்ரெட்லி ஆமைகள் குழிதோண்டி 312 முட்டைகள் இட்டு சென்றது. அந்த முட்டைகளை வனத்துறையினர் எடுத்து முட்டை பொரிப்பகத்தில் பத்திரமாக புதைத்து வைத்துள்ளனர்.
1,053 முட்டைகள் சேகரிப்பு
ஜனவரி மாதத்தில் சுமார் 5000 ஆயிரம் முட்டைகள் சேகரித்து ஆண்டுதோறும் வைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை கோடியக்கரைக்கு 9 ஆமைகளும், ஆறுகாட்டுதுறைக்கு ஒரு ஆமை என மொத்தம் 10 ஆமைகள் வந்து முட்டையிட்டதில் 1,053 முட்டைகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. வேதாரண்யம் கடற்கரை பகுதியில் சேற்றில் மாட்டி ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவதும், மேலும் மீனவர் வலையில் மாட்டியும், படகு-கப்பலில் அடிபட்டும் ஆமைகள் இறந்து கரைஒதுங்குவது காரணமாக ஆமைகள் முட்டையிட வருவது மிகவும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.