திருப்பதிக்கு 1,008 மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் ரெயில் மூலம் பயணம்
சென்னையைச்சேர்ந்த, 1,008 ஆதரவற்ற, மாற்றுத்திறன் கொண்ட சிறுவர்கள் நேற்று திருமலை திருப்பதிக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டனர்.
ஆதரவற்ற குழந்தைகள் திருப்பதி பயணம்
சென்னையைச்சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தினர் ஆண்டுதோறும் ஆதரவற்ற, மாற்றுத்திறன் கொண்ட சிறுவர்களை மகிழ்விக்க கேளிக்கை அரங்குகள், சுற்றுலா அழைத்துச்சென்று வருகின்றனர். அந்தவகையில் நடப்பாண்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து திருப்பதி வெங்கடேசுவரர் கோவிலுக்கு, 1,008 சிறுவர்களை சிறப்பு ரெயில் மூலம் நேற்று அழைத்துச்செல்லப்பட்டனர்.
அவர்களுக்காக சென்னையில் இருந்து ரேணிகுண்டா வரை சிறப்பு ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை சிறுவர்கள் சென்ற சிறப்பு ரெயிலை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளூர் ஆலோசனைக்குழுத் தலைவர் சேகர் ரெட்டி ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
சிறப்பு தரிசனம்
திருப்பதிக்கு ரெயிலில் பயணித்த சிறுவர்களின் அடையாளத்திற்கு டி.சர்ட்., அடையாள அட்டை, தொப்பி வழங்கப்பட்டது. இது இல்லாமல் டிராவல் பேக், அதில், 25 நொறுக்குத்தீனி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. காலை உணவு ரெயிலில் வழங்கப்பட்டது. ரெயிலில் சிறுவர்களை மகிழ்விக்க மேஜிக், மிமிக்கிரி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சிறுவர்களின் பாதுகாப்பிற்கு, 300 தன்னார்வலர்கள் உடன் சென்றனர். ரேணிகுண்டாவில் இருந்து திருமலைக்கு, 30 சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருமலை சென்ற சிறுவர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பு தரிசனத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தரிசனம் முடித்த பின், கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மதியம் அன்னதானக்கூடத்தில் மதிய உணவு சாப்பிட்டனர்.
இதையடுத்து, திருமலையில் இருந்து ரேணிகுண்டாவிற்கு பஸ்சில் பயணித்தனர். பின்னர், சிறப்பு ரெயில் மூலம் இரவு சென்னை திரும்பினர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளூர் ஆலோசனைக்குழுத்தலைவர் சேகர் ரெட்டி மற்றும் தொண்டு நிறுவனத்தினர் செய்திருந்தனர்.