விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு 10 ஆயிரம் நெல் மூட்டைகள் வரத்து
குறுவை அறுவடை பணிகள் தொடங்கியதால் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தது.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இங்கு கடலூர் மாவட்டம் மட்டும் இன்றி அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் தங்களது விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது குறுவை அறுவடை பணிகள் தொடங்கியுள்ளதால் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு நெல் மூட்டைகள் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். அதனை வியாபாரிகள் போட்டி போட்டு கொள்முதல் செய்தனர். இதில் 75 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ஏ.எஸ்.டி.16 என்கிற நெல் ரகம் அதிகபட்சமாக ரூ.1545 க்கும், குறைந்தபட்சமாக ரூ.1380-க்கும் விற்பனையானது.
ரூ.1¼ கோடிக்கு கொள்முதல்
இதேபோல் ஏ.டி.டி.45 என்கிற நெல் ரகம் அதிகபட்சமாக ரூ.1469-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1400-க்கும், பி.பி.டி. என்கிற நெல் ரகம் அதிகபட்சமாக ரூ.2100-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1939-க்கும் விற்பனையானது. இதன் மூலம் நெல் மூட்டைகள் மொத்தம் ரூ.1 கோடியே 35 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டதாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.