ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் முன்கூட்டியே செலுத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது; பெண்கள் கருத்து


ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் முன்கூட்டியே செலுத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது; பெண்கள் கருத்து
x

ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் முன்கூட்டியே செலுத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருச்சி

மகளிர் உரிமைத்தொகை

தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. இந்த திட்டத்துக்காக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது. ெமலும் விண்ணப்பம் பெறுவதற்கான முகாம்கள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த திட்டத்தில் தகுதிவாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதைத்தொடர்ந்து காஞ்சீபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில், மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1,000 உரிமைத்தொகை செலுத்தப்பட்டது. இதற்கு பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பெண்கள் சிலர் கூறியதாவது:-

மகிழ்ச்சி அளிக்கிறது

திருச்சி மில் காலனியை சேர்ந்த பார்வதி:- எனது கணவர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். நான் தனியாக வசித்து வருகிறேன். எனக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து இருந்தேன். அது நாளைக்கு (இன்று) தான் வரும் என்று கூறினார்கள். ஆனால் முன்கூட்டியே வந்துவிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி செலவுக்கு அடுத்தவர்களை நம்பி இருக்க தேவையில்லை. பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கிய முதல்-அமைச்சருக்கு மனமார்ந்த பாரட்டுக்கள். அவர் நீடுழி வாழ வேண்டும். என்னை போன்ற ஏழை-எளிய பெண்களுக்கு இந்த உதவி தேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

திருச்சி சமத்துவநகரை சேர்ந்த குடும்பத்தலைவி காஞ்சனா:- பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இத்தகைய திட்டம் அமல்படுத்தப்பட்டது இல்லை. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக இந்த திட்டம் உள்ளது. இந்த திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார். ஆனால் ஒரு நாள் முன்பே பணம் வந்தது மிக்க மகிழ்ச்சி. எங்கள் பகுதியில் உள்ள கட்டிட தொழிலாளர்கள், வீட்டுவேலை பார்ப்பவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என்று பல குடும்ப தலைவிகளுக்கு இன்றே உதவித்தொகை வந்துவிட்டது. அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பேருதவி

பி.மேட்டூரை சேர்ந்த குடும்பத்தலைவி சங்கீதா சுரேஷ்:- எங்களைப் போன்ற நடுத்தர, எளிய மக்களுக்கு இத்தொகை பெரிய வரப்பிரசாதம் ஆகும். ேதர்தல் அறிக்கையில் கூறியபடி இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துவது வரவேற்கத்தக்கது. சமுதாய முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்கு முக்கியமான ஒன்று. அதை கருத்தில் கொண்டு பெண்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை குடும்ப செலவுகளுக்கும், அன்றாட சிறு செலவுகளுக்கும் பேருதவியாக இருக்கும்.

மண்ணச்சநல்லூரை சேர்ந்த குடும்பத்தலைவி மகேஸ்வரி:- மகளிர் உரிமைத்தொகை திட்டம் இன்றுதான் முறைப்படி தொடங்கப்படுகிறது. ஆனால் நேற்றே என்னுடைய வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான குறுஞ்செய்தியும் எனது செல்போனுக்கு வந்துள்ளது. இது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நான் டிரைவராக வேலை பார்த்து வரும் எனது கணவர் கொண்டுவரும் வருமானத்தில் சிக்கனமாக செலவு செய்து வருகிறேன். இந்த உரிமைத்தொகை எனது குழந்தைகளின் கல்விச்செலவுக்கு உதவியாக இருக்கும். முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பயனுள்ளதாக இருக்கும்

கருமண்டபத்தை சேர்ந்த இல்லத்தரசி பாண்டி மீனா:- மகளிர் உரிமைத்தொகை நேற்று எங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. இந்த தொகை எங்களது குடும்ப செலவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எங்களை போன்ற குடும்ப தலைவிகளுக்கு கையிருப்பு தொகையாக இருக்கும். மேலும் அவசர காலங்களில் இந்த தொகை பேருதவியாக இருக்கும். இந்த திட்டத்தை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

திருச்சியை சேர்ந்த குடும்ப தலைவி சந்திரா:- மகளிர் உரிமைத்தொகை எங்களுக்கு கிடைத்துள்ளது மிகவும் இன்ப அதிர்ச்சியாக உள்ளது. அனைத்து தரப்பு மக்கள் இந்த திட்டத்திற்கு வரவேற்பு அளித்துள்ளனர். எதிர்பாராத விதமாக உடல்நிலை சரியில்லை என்றால் யாரிடம் பணம் கேட்பது என்று கூட தெரியாத நிலையை தவிர்க்க, என்னை போன்றவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைத்தது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கண்டிப்பாக இந்த உரிமைத்தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


Next Story