1,000 யூனிட் மின்சாரம் இலவசம்:ஈரோட்டில் விசைத்தறியாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
விசைத்தறிகளுக்கு 1,000 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பை தொடர்ந்து ஈரோட்டில் விசைத்தறியாளர்கள் நேற்று பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
விசைத்தறிகளுக்கு 1,000 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பை தொடர்ந்து ஈரோட்டில் விசைத்தறியாளர்கள் நேற்று பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
இலவச மின்சாரம்
விசைத்தறிகளுக்கு இலவச மின்சார பயன்பாடு 750 யூனிட்டில் இருந்து 1,000 யூனிட்டாக உயர்த்தி கடந்த வாரம், முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். நேற்று முன்தினம் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து விசைத்தறியாளர்கள் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். மேலும் அவர்கள் முதல்-அமைச்சருக்கு தங்களது நன்றியினையும் தெரிவித்து கொண்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ், ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி விசைத்தறிக்கான மின் இணைப்பில் இலவச மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து, 1,000 யூனிட்டாகவும், கைத்தறிக்கு 200 யூனிட்டில் இருந்து, 300 யூனிட்டாகவும் உயர்த்தி நேற்று முன்தினம் அரசாணை வெளியிட்டு உள்ளனர். இதன் மூலம் சிறு, குறு விசைத்தறியாளர்கள் முழுமையாக பயன் பெறுவார்கள்.
மின் கட்டணம்
தமிழகத்தில் தற்போது உள்ள 6 லட்சம் விசைத்தறிகள், 1 லட்சத்து 68 ஆயிரம் மின் இணைப்பு மூலம் இயங்குகிறது. இதில் 40 ஆயிரம் மின் இணைப்புகள், 750 யூனிட்டுக்குள் முழுமையாக பயன் பெற்று வருகின்றனர். தற்போது 1,000 யூனிட் இலவச மின்சாரம் என அறிவித்ததால் 6 தறிகளை தலா 16 மணி நேரம் என இயக்கி 3 ஆயிரம் மீட்டர் துணிகளை உற்பத்தி செய்தனர். இனி முழுமையாக பயன்படுத்தி 4 ஆயிரம் மீட்டர் துணிகளை உற்பத்தி செய்யலாம். இதனால் கூடுதலாக 20 ஆயிரம் மின் இணைப்பினர், மின் கட்டணம் செலுத்தாமல் இயங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
திருமகன் ஈவெராவுக்கு நன்றி
மேலும் 1,001 யூனிட் முதல் 1,500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 1 ரூபாய் 5 காசுகள் என இருந்தது தற்போது 50 காசுகளாகவும், 1,500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு யூனிட்டுக்கும் 1 ரூபாய் 40 காசுகள் என இருந்தது தற்போது 70 காசுகளாக குறைத்ததால், சில ஆயிரம் ரூபாய் விசைத்தறியாளர்களுக்கு மிச்சமாகும். இதன் காரணமாக நலிவடையும் நிலையில் உள்ள இந்த தொழில் மேம்படும்.
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் சிறு, குறு யூனிட் விசைத்தறியைவிட பெரிய யூனிட்கள் அதிகம் உள்ளனர். ஆனால், பிற மாவட்டங்களில் சிறிய யூனிட் விசைத்தறியாளர்கள் அதிகம் என்பதால், அவர்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும். இந்த அறிவிப்புக்காக வருகிற 12-ந்தேதி முதல்-அமைச்சரை பாராட்டி எங்களுடைய கூட்டமைப்பு சார்பில் விழா நடத்துகிறோம். மேலும் இந்த உத்தரவை எங்களுக்காக சட்டசபையில் பேசி பெற்றுத்தந்த மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவுக்கு எங்களது நன்றியை சமர்ப்பிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.