100 வகையான பாரம்பரிய நெல் அறுவடை
திருத்துறைப்பூண்டி அருகே வேளாண்மை பண்ணையில் 100 வகையான பாரம்பாிய நெல் அறுவடை நடந்தது.
கோட்டூர்:
திருத்துறைப்பூண்டி அருகே வேளாண்மை பண்ணையில் 100 வகையான பாரம்பாிய நெல் அறுவடை நடந்தது.
பாரம்பரிய நெல் ரகங்கள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு வேளாண் பண்ணையில் பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டன. இதில் 90 நாட்கள் முதல் 200 நாட்கள் வரை வயதுள்ள பாரம்பரிய நெல் ரகங்களான புழுதிக்கார், ரோஸ்கார், சின்னார், மரதொண்டி, காளான் நமக், கருத்தக்கார், சண்டிகார், சிங்கினிகார், குருவிக்கார், கார்த்திகை சம்பா, ஆனைக்கொம்பன், ரத்தசாலி, காலாஜீரா, மடுமுழுங்கி, சொர்ணவாரி, கம்பன்சம்பா, கள்ளிமடையான், களர்பாளை, உவர்முண்டான், கள்ளுருண்டை, கொள்ளிக்கார், கட்டி சம்பா, சிறுமிளகி, பெருமிளகி, கருமிளகி, காடைகழுத்தான் போன்றவை மருத்துவ குணமுள்ள அழிவின் விளிம்பு நிலையில் உள்ள இனங்கள் ஆகும்.
அதிக மகசூல்
இந்த பண்ணையில் 100 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து மறு உற்பத்தி செய்து விவசாயிகளிடையே பரவலாக்க சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது.
இது குறித்து பண்ணை ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் கூறியதாவது:- பாரம்பரிய நெல் ரகங்கள் பொதுவாக பருவநிலை மாற்றத்தை எதிர் கொண்டு அதற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு விவசாயிகளுக்கு அதிக மகசூலை அளிக்கும். இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழை மற்றும் இயற்கை சீற்றங்களை தாண்டியும் நல்ல முறையில் விளைச்சல் கிடைத்து உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கையும், பரப்பளவும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே மக்கள் இயற்்கையான உணவு பொருட்களை அடையாளம் கண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.