என்எல்சியில் 100 சதவீத வேலைவாய்ப்பும் வட மாநிலத்தவருக்கா? - மக்கள் நீதி மய்யம் கண்டனம்


என்எல்சியில் 100 சதவீத வேலைவாய்ப்பும் வட மாநிலத்தவருக்கா? - மக்கள் நீதி மய்யம் கண்டனம்
x

என்எல்சியில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் ஆர். தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொதுத்துறைக்குச் சொந்தமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் 'நவரத்னா' தகுதியைப் பெற்றது. சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட ஊர் மக்கள், தங்கள் நிலங்களை அளித்து உருவான இந்நிறுவனத்தில் தற்போது 100 சதவீத வேலைவாய்ப்பை வட இந்தியர்களுக்கு மட்டுமே வழங்குவது கடும் கண்டனத்துக்குரியது.

இங்கு பட்டதாரிப் பொறியாளர்களுக்கான இடங்களை நிரப்பத் தேர்வு செய்யப்பட்ட 299 பேரில் ஒருவர்கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை. இந்நிறுவனத்தில் பணிபுரிய தமிழக இளைஞர்கள் யாருக்குமே தகுதி இல்லையா? கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோல தமிழர்களைப் புறக்கணிப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே, தற்போது நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதித் தேர்வை ரத்து செய்துவிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும். ஆட்கள் தேர்வு பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரித்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story