100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
கந்தர்வகோட்டையில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
நாடு முழுவதும் ஆன்லைனில் பதிவு செய்து 100 நாள் வேலை திட்ட பணிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், சர்வ பிரச்சினை காரணமாக ஆன்லைனில் பதிவு செய்ய முடியாத காரணத்தால் 100 நாள் பணி வழங்கவில்லை என ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கந்தர்வகோட்டை ஒன்றியம், பதுப்பட்டி ஊராட்சியை சேர்ந்த வேம்பன்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலை வழங்காததை கண்டித்து பட்டுக்கோட்டை- கந்தர்வகோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார், வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில், மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பட்டுக்கோட்டை- கந்தர்வகோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.