100 நாள் வேலை திட்ட மாற்றுத்திறனாளி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
3 மாத ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து 100 நாள் வேலை திட்ட மாற்றுத்திறனாளி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர் செல்லமுத்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். ஓய்வூதியர் சங்கத்தின் திருச்சி மண்டல தலைவர் கிருஷ்ணசாமி, மாவட்ட துணை அமைப்பாளர் ரமேஷ் உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 3 மாதங்கள் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளதை உடனே வழங்க வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இ-சேவை மையத்தில் பதிவு செய்யும்போது விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு ஒருமுறை கடவுச்சொல் வராததை சரி செய்து உரிமைத் தொகை கிடைக்க வழி செய்ய வேண்டும். 100 நாள் வேலையை 150 நாட்களாக அதிகரித்து தினக்கூலியை ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.