10 புலிகள் உயிரிழந்த விவகாரம்: தேசிய புலிகள் ஆணைய குழுவினர் நாளை ஊட்டி வருகை
நீலகிரியில் புலிகள் காப்பக பகுதியில் 10 புலிகள் உயிரிழந்தது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதிகளை கொண்டது. இங்கு காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான்கள், சிறுத்தைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. சமீப நாட்களாக புலிகள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி சின்னக்குன்னூர் வனப்பகுதியில் ஒரு ஆண் புலிக்குட்டி இறந்து கிடப்பது தெரியவந்தது. பின்னர் கால்நடை டாக்டர்கள் புலிக்குட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்து, ஆய்வுக்காக உடல் உறுப்புகளை கோவைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், தாய்ப்பால் கிடைக்காததால் புலிக்குட்டி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து மற்ற 3 புலிக்குட்டிகள் மற்றும் தாய்ப்புலியை வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
சின்ன குன்னூர் வனப்பகுதியில் ஏற்கனவே புலிக்குட்டி இறந்து கிடந்த பகுதியில், மேலும் 3 பெண் புலிக்குட்டிகள் இறந்து கிடந்தது. இதையடுத்து புலிக்குட்டிகளின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அந்த பகுதியில் எரிக்கப்பட்டது. புலிக்குட்டிகள் தனியாக இருந்ததால் தாய் புலியின் நிலையை அறிவதற்காக, 40 பேர் அடங்கிய 4 குழு அமைக்கப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி வனக்கோட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 10 புலிகள் உயிரிழந்தது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 10 புலிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நேரில் விசாரிக்க தேசிய புலிகள் ஆணைய குழுவினர் நாளை ஊட்டிக்கு வர உள்ளனர். முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 6 புலி குட்டிகள் இறந்த பகுதி மற்றும் எமரால்டு, நடுவட்டம், கார்குடி ஆகிய வனப்பகுதிகளுக்கு நேரில் சென்று தடயங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.