10 சதவீத இடஒதுக்கீடு: காங்கிரசின் ஆதரவும்... எதிர்ப்பும்...!
10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிஸ் நிலைபாட்டில் ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிறது.
சென்னை,
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதற்கு தமிழக அளவில் திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆனால் தீர்ப்புக்கு பாஜக, அதிமுக, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இந்தநிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
இதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதிமுக, பாஜக கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன.
இதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சி தலைவர்கள் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை, தேசிய அளவில் உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கண்ணோட்டம் வேறு. ஆனால் சமூகநீதி அடிப்படையில் தமிழ்நாட்டில் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
ஆனால் 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் 10 சதவிகித இடஒதுக்கீடு சரியான நடவடிக்கை என கருதி, தமிழக காங்கிரஸ் அதனை இதயப்பூர்வமாக வரவேற்கிறது என்று தெரிவித்தார்.
இதேபோன்று அக்கட்சியின் மூத்த தலைவரும், பொதுச்செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அடிப்படைப் பணிகள் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2005-06-ல் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, இது குறித்து ஆராய சின்ஹோ ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது பரிந்துரையை 2010-ல் வழங்கியதாகவும், அதன் பிறகு நாடு தழுவிய விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, 2014-க்குள் மசோதா தயாரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 5 ஆண்டுகள் தாமதத்திற்கு பின்னரே அதனை சட்டமாக்கியதாகவும், ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்தார். மேலும், இந்த முடிவை நாம் பாராட்ட வேண்டும் அதே வேளையில், புதுப்பிக்கப்பட்ட ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பில் அது எந்த நிலையில் உள்ளது என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரசின் நிலைபாட்டில் ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிறது.