சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 10 பேர் காயம்


சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 10 பேர் காயம்
x

அரிமளம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டை அருகே புதுநிலைப்பட்டி கண்ணுடை அய்யனார், குருந்துடை அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று காலை 10 மணியளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

முன்னதாக காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் ஜல்லிக்கட்டு திடலுக்கு அனுமதிக்கப்பட்டனர். முதலில் உள்ளூர் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை.

150 காளைகள்

அதை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 43 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது.

இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், பொன்னமராவதி, திருச்சி, காரைக்குடி, திருப்பத்தூர், திருமயம், பனையப்பட்டி, விராச்சிலை, அறந்தாங்கி, சிங்கம்புணரி, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 150 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

10 பேர் காயம்

காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பலத்த காயமடைந்த 2 பேர் மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சில்வர் பாத்திரம், ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி, முன்னாள் எம்.எல்.ஏ. ராமசுப்புராம், காங்கிரஸ் வட்டார தலைவர் புதுப்பட்டி கணேசன் மற்றும் அரிமளம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.


Next Story