ஓசூர் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து 10 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம்


ஓசூர் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து 10 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம்
x

ஓசூர் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து 10 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர் ,

ஓசூர் அருகே திருச்சிப்பள்ளி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இதனை சாப்பிட கோழிப்பண்ணை மேற்பார்வையாளர் வடமாநில தொழிலாளர்களை அழைத்தார். இதையடுத்து சுமார் 30 தொழிலாளர்கள் ஒரு சரக்கு வேனில் நேற்று கோவிலுக்கு சென்றனர்.

அங்கு பிரியாணி சாப்பிட்டு முடித்ததும் அதே சரக்கு வேனில் அவர்கள் அனைவரும் மீண்டும் கோழிப்பண்ணைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சத்தீஸ்கார் மாநிலத்தை சேர்ந்த கோழிப்பண்ணை தொழிலாளி கரன் பட்டேல் (வயது 24) என்பவருக்கு கை முறிவும், தலையில் பலத்த காயமும் ஏற்பட்டது.

விசாரணை

மேலும் 10 பேருக்கு தலையில் பலத்த காயமும், சிலருக்கு கை, கால்களில் லேசான காயங்களும் ஏற்பட்டன. விபத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. லேசான காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று கோழிப்பண்ணைக்கு திரும்பினர் இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story