மினிலாரியில் கடத்திய ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் சிக்கியது-நகராட்சி கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது
கேரளாவில் இருந்து புளியரை வழியாக மினிலாரியில் கடத்திய ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் சிக்கியது. இதுதொடர்பாக நகராட்சி கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கோட்டை:
கேரளாவில் இருந்து புளியரை வழியாக மினிலாரியில் கடத்திய ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் சிக்கியது. இதுதொடர்பாக நகராட்சி கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புளியரை சோதனை சாவடி
தமிழக-கேரள எல்லையாக தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை திகழ்கிறது. இந்த வழியாக தினமும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு ஆயிரக்கணக்கான வாகனங்கள் இருமாநிலங்களுக்கும் சென்று வருகின்றது.
மேலும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், புகையிலை பொருட்கள் உள்ளிட்ட கடத்தல் சம்பவத்தை தடுப்பதற்காக புளியரையில் சோதனை சாவடியும் அமைக்கப்பட்டு உள்ளது.
ரகசிய தகவல்
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படையினருக்கு கேரளாவில் இருந்து புகையிலை பொருட்களை புளியரை வழியாக சிலர் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் புளியரை சோதனை சாவடிக்கு விரைந்து சென்றனர்.
புகையிலை பொருட்கள்
அங்கிருந்த சக போலீசாருடன் இணைந்து வாகனங்களை கண்காணித்தனர். அப்போது கேரளாவில் இருந்து ஒரு மினி லாரி வந்தது. அதை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் மூட்டை, மூட்டையாக பான் மசாலா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மினிலாரியில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், ெசங்கோட்டையைச் ேசர்ந்த செண்பகராஜன் (வயது 32), டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த அஜய்சதீஷ் (24), கிருபாகரன் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
நகராட்சி கவுன்சிலர்
தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார், மினி லாரியுடன் சேர்த்து அதில் இருந்த சுமார் 1,250 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் கைதான செண்பகராஜன் செங்கோட்டை நகர பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகியாகவும், நகராட்சி 24-வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.