சென்னையில் 10 கிலோ கஞ்சா- ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்


சென்னையில் 10 கிலோ கஞ்சா- ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்
x

சென்னையில் கோடம்பாக்கம், பெரியமேடு மற்றும் குமரன் நகர் பகுதிகளில் நேற்று ஒரே நாளில் நடந்த போலீஸ் வேட்டையில் 10 கிலோ கஞ்சா மற்றும் ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

தினமும் கஞ்சா வேட்டை

சென்னையில் தினமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா விற்பவர்கள், கடத்தலில் ஈடுபடுபவர்களை வேட்டையாடி பிடித்து சிறையில் தள்ளி வருகிறார்கள். நேற்று பெரியமேடு, கோடம்பாக்கம், குமரன்நகர் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பெரியமேடு மூர்மார்க்கெட் அருகே கஞ்சாவுடன் நின்ற ஆசாமியை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரது பெயர் அப்துல்அலிம் (வயது 27). மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்துள்ளார். அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் மாநகராட்சி மைதானம் அருகே கஞ்சா பொட்டலத்துடன் நின்ற கேரள ஆசாமி மிதுன் (24) என்பவரும் கைதானார். அவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

போதை மாத்திரைகள் பறிமுதல்

குமரன்நகர் போலீஸ் எல்லைப்பகுதியான ஜாபர்கான்பேட்டையில் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட சரண் (19), அருள் (32) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்று ஒரே நாளில் போலீசார் நடத்திய வேட்டையில் 10 கிலோ கஞ்சா, ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story