புதுக்கோட்டையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்
புதுக்கோட்டையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 கிலோ கஞ்சா பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை மற்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கந்தர்வகோட்டையில் கஞ்சா கடத்தி வந்த 3 பேரை பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் விராலிமலையை சேர்ந்த வெள்ளைச்சாமி, கந்தர்வகோட்டையை சேர்ந்த சரவணன், பாலமுருகன் ஆகியோர் என தெரியவந்தது. மேலும் காரில் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கல்லூரி மாணவர்கள்
இதையடுத்து, 3 பேரையும், புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து கந்தர்வகோட்டையில் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்தனர். இவர்கள் பல்வேறு நபர்களுக்கு பொட்டலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவ்வப்போது கஞ்சாவை கடத்தி வந்து அதனை விற்பதை தொழிலாக செய்து வந்திருக்கின்றனர் என போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே கஞ்சா வைத்திருந்ததாக 2 கல்லூரி மாணவர்களை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் போதை பழக்கத்தில் கஞ்சா வாங்கி வைத்திருக்கின்றனர். அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினர்.