1½ வயது குழந்தையின் கை அகற்றம் 'தவறான சிகிச்சையே காரணம்' என பெற்றோர் குற்றச்சாட்டு


1½ வயது குழந்தையின் கை அகற்றம் தவறான சிகிச்சையே காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு
x

ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 1½ வயது குழந்தையின் கையில் ரத்தம் உறைந்து அழுகிய நிலையில் அந்த கை அகற்றப்பட்டது. தவறான சிகிச்சையே காரணம் என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை,

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தஸ்தகீர் (வயது 32). இவரது 1½ வயது ஆண் குழந்தை முகமது மகிரின் தலையில் நீர் கட்டியிருந்ததால் கடந்த ஆண்டு மே மாதம் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த ஒரு வருடமாக சென்னையில் தங்கி குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தார்கள்.

இந்த நிலையில், அறுவை சிகிச்சையின் போது குழந்தையின் தலையில் பொருத்தப்பட்டிருந்த 'டியூப்' கடந்த மாதம் 25-ந்தேதி, இயற்கை உபாதை கழிக்கும்போது வெளியே வந்தது.

இதையடுத்து, உடனடியாக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை மீண்டும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அன்றைய தினம் இரவு 9 மணியளவில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், குழந்தையின் இடது கை மற்றும் வலது காலில் 'டிரிப்ஸ்' போடப்பட்டது. அதன்மூலமே குழந்தைக்கு மருந்து செலுத்தப்பட்டது.

ரத்தம் உறைதல்

குழந்தை தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்தது. இந்த நிலையில், கடந்த 29-ந்தேதி குழந்தையின் வலது கையில் மருந்தை செலுத்தினார்கள். மருந்து ஏற்றிய சிறிது நேரத்திலேயே குழந்தையின் கை விரல்கள் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. இதனால், பதற்றம் அடைந்த குழந்தையின் தாய் அஜிஷா உடனடியாக பணியில் இருந்த நர்சிடம் தெரிவித்தபோது, இது ஒன்றும் இல்லை. மருந்து நன்றாக தான் சென்றுகொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

கை அகற்றம்

ஆனால், குழந்தையின் வலது கை முட்டுப்பகுதி வரை கொஞ்சம், கொஞ்சமாக கருப்பு நிறமாக மாற தொடங்கியது. இதனால், பதறிப்போன அஜிஷா மீண்டும் நர்சிடம் கூறியுள்ளார். இதையடுத்து, குழந்தையின் கையை டாக்டர்கள் பார்த்தனர். அப்போது, வலது கையை அகற்ற வேண்டும் இல்லையென்றால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்று கூறி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நேற்று மதியம் 2 மணியளவில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் தோள்பட்டை வரையில் கை அகற்றப்பட்டது.

தவறான சிகிச்சையே காரணம்

தனது மகனின் கை அகற்றப்பட்டதற்கு தவறான சிகிச்சையே காரணம் என்று பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.

குழந்தை விவகாரம் குறித்து விசாரிக்க குழு

குழந்தையின் கை அகற்றப்பட்டது தொடர்பாக ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரி நிர்வாகம் அளித்துள்ள விளக்கம் வருமாறு:-

1½ வயது குழந்தை முகமது மகிர் குறைமாத குழந்தையாகவே பிறந்துள்ளான். இதேபோல, தலையில் நீர் கசியும் கோளாறு இருந்துள்ளது. குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடும் இருந்தது. இந்த நிலையில், நீர் கசிவை கட்டுப்படுத்த 5 நாட்கள் முன்பாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வார்டில் இருந்தான். பிறகு குழந்தையின் வலது கையில் ரத்த உறைதல் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க தீவிர முயற்சிகள் செய்தும் ரத்தம் உறைதல் அதிகமாகியது. தகுந்த சிகிச்சை கொடுத்த பிறகும் அது பலன் அளிக்கவில்லை. எனவே, உடனடியாக பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள், டாக்டர்கள் குழந்தையின் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள். குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளான். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் அறுவுறுத்தலின்படி, அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழு, விசாரணை செய்து அதுகுறித்த அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story