காரில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தீவிர கண்காணிப்பு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் மற்றும் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பொள்ளாச்சி குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு, பொள்ளாச்சி அருகே உள்ள ரெட்டியார்மடம் பகுதியில் இருந்து காரில் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்லப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
ரேஷன் அரிசி பறிமுதல்
அவரது உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேரு தலைமையிலான போலீசார், அங்கு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மிக வேகமாக ஒரு கார் வந்தது. உடனே போலீசார் அந்த காரை மறித்தனர். பின்னர் காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், பொள்ளாச்சியை சேர்ந்த மாதேஸ்வரன்(வயது 38) என்பது தெரியவந்தது. பின்னர் காரை போலீசார் சோதனையிட்டனர். அதில் காரின் பின்பகுதியில் சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.