காரில் கடத்தப்பட்ட 1¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
புதுக்கோட்டையில் காரில் கடத்தப்பட்ட 1¾ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
வாகன சோதனை
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை தஞ்சாவூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில், தஞ்சாவூர், புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் புதுக்கோட்டை மாவட்டத்தில் சோதனையில் ஈடுபட்டனர். திருமயம்-விராச்சிலை ரோட்டில் வி.லட்சுமிபுரம் எனும் இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டனர். இதில் 900 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரை சேர்ந்த செல்விக்கு கொண்டு செல்வதாக காரின் டிரைவரான அதே ஊரை சேர்ந்த சரவணன் (வயது 42) கூறினார். இதையடுத்து போலீசார் சரவணனை கைது செய்து, ரேஷன் அரிசியையும், காரையும் பறிமுதல் செய்தனர்.
1¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
இதேபோல மீமிசல் அருகே அரசநகரிப்பட்டினம் பகுதியில் புதுக்கோட்டை பறக்கும்படை தாசில்தார் வரதராஜன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் கடத்தி செல்லப்பட்ட 850 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கல்லூரை சேர்ந்த டிரைவர் கார்த்திக் (38) என்பவரை பிடித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து கார்த்திக்கைபோலீசார் கைது செய்தனர். காரையும், ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் 1,750 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அதனை யாருக்காக கடத்தி செல்லப்பட்டதோ அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.