5 மாவட்டங்களுக்கு 1 லட்சம் பனை விதைகள்


5 மாவட்டங்களுக்கு 1 லட்சம் பனை விதைகள்
x

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்பட 5 மாவட்டங்களுக்கு 1 லட்சம் பனை விதைகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

திருநெல்வேலி

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்பட 5 மாவட்டங்களுக்கு 1 லட்சம் பனை விதைகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

பனை விதைகள்

நீர் நிலைகளின் பாதுகாவலன் என அழைக்கப்படும் பனை மரங்களை பாதுகாக்கும் விதமாக, தமிழக சட்டமன்றத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்தபோது, சபாநாயகர் அப்பாவு, ஆண்டுதோறும் 1 லட்சம் பனை விதைகளை தனது சொந்த செலவில் அரசுக்கு அளிக்கிறேன் என்று தெரிவித்தார்.

அதன்படி, ராதாபுரத்தில் இருந்து முதல்கட்டமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1 லட்சம் பனை விதைகளை லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்து சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏரி உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளில் நடவு செய்யப்பட்டது.

அப்பாவு தொடங்கி வைத்தார்

இந்த ஆண்டுக்கான 1 லட்சம் பனை விதைகளை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு 1 லட்சம் பனை விதைகளை லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சபாநாயகர் அப்பாவு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பு ஏற்ற உடன் தமிழகத்தின் அடையாளமாக உள்ள பனை மரங்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். பனை மரத்தை வெட்ட வேண்டும் என்றாலும் அரசிடம் அனுமதி பெற வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார். ஒவ்வொரு ஆண்டும் வேளாண் துறை மூலம் பல லட்சம் பனை விதைகள் விதைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆண்டுதோறும் 1 லட்சம் விதைகள் தருவதாக சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தேன்.

கலெக்டர்

இதையொட்டி கடந்த ஆண்டு 1 லட்சம் விதைகள் கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டும் 1 லட்சம் பனை விதைகள் தென் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

பனை விதைகளை சேகரித்து நீண்ட காலம் நடவு செய்யாமல் இருந்தால் அந்த பனை விதைகள் பலன் தராது. விதை எடுத்து 10 முதல் 15 நாட்களில் விதைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, ராதாபுரம் ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story