1 கிலோ வெங்காயம் ரூ.12-க்கு விற்பனை
நெல்லை காய்கறி மார்க்கெட்டில் 1 கிலோ வெங்காயம் ரூ.12-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் வெங்காயத்தின் விளைச்சல் வழக்கத்தைவிட குறைந்தது. ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் வெங்காயத்தின் உற்பத்தி தற்போது அதிகளவில் உள்ளது. இதனால் தேவையை கருத்தில் கொண்டு வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு பெரிய வெங்காயம் (பல்லாரி) இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வெங்காயம் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகனங்கள் மூலமும் சிறிய வியாபாரிகள் தெருத்தெருவாக சென்று வெங்காயம் விற்பனை செய்து வருகிறார்கள். வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த ஒரு வாரமாகவே வெங்காயத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது. அதன்படி 1 கிலோ ரூ.15 முதல் ரூ.18 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நெல்லை மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயம் 1 கிலோ ரூ.12 முதல் ரூ.17 வரை தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்பட்டது. விலை சரிந்துள்ளதால் பொதுமக்களும் போட்டி போட்டு அதிகளவில் வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர். இதேபோல் நெல்லை மாவட்டத்தில் மிளகாய் விளைச்சலும் அதிகரித்துள்ளது.